திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிலுள்ள  சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் ஆலய உற்சவம் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஆலயத்திற்குச் சென்ற திருகோணமலை நகர் பகுதியைச் சேர்ந்த குழுவினருக்கும் சல்லி பிரதேசத்திலுள்ள மற்றுமொரு குழுவினருக்கும் இடையே சம்பவதினம் இரவு மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த மோதலில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 3 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாகவும் இரு குழுக்களுக்கிடையே பழைய விரோதம் காரணமாக மதுபோதையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளிபொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.