பிணைமுறி தொடர்பில் சபையில் சர்ச்சை

Published By: Vishnu

05 Jun, 2018 | 10:30 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட நிறுவனங்களில் இருந்து காசோலை பெற்றுக்கொண்டதாக கூறப்படும்  பாரளுமன்ற  உறுப்பினர்கள் 118 பேரின் விபரங்கள் உள்ளடங்கிய அறிக்கை மற்றும் தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட நபர்களின் அறிக்கை குறித்து பாராளுமன்றத்தில் இன்று ஆளும் எதிர் தரப்பினருக்கிடையில் கடுமையான வாத விவாதம் இடம்பெற்றது. 

 

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மூடி மறைக்கப்படுகின்ற தென்றால் ஜனாதிபதியின் பெயரும் இந்த அறிக்கையில் உள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுவதாகவும் எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். 

பாராளுமன்றம் கூடியவேளையில் மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புடைய மறைக்கப்பட்ட அறிக்கையை வெளிபடுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதன் போது  காரணிகளை தெளிவுபடுத்தும் வகையில்  சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறுகையில், 

பிணை முறி  விசாரணை ஆணைக்குழுவுடன் தொடர்புடைய சில அறிக்கைகள் வெளியிடப்படவில்லையெனவும் இது தொடர்பான விடயங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு ஊடக அறிக்கைகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சில பொய்யான செய்திகள் வெளியாவதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.  இது மிகவும் கவலைக்குறியதாகும்.  

மேலும் இன்றைய தினம்  பிணைமுறி குறித்த  ஆணைக்குழுவின் அறிக்கையில் சீ-350 -360 வரையான  ஒரு பகுதியே கிடைத்துள்ளது. ஆகவே  இன்று கூடிய பாராளுமன்ற  விவகாரக் குழுவின் தீர்மானங்களுக்கு அமைய முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் அதனை நான் சபையில் முன்வைக்கின்றேன்.  இதனால் சகல தரப்பினரும் இந்த விடயத்தில் பொறுப்பு தன்மையுடன் நடந்துக்கொள்ளுமாறும் பொய்யாக சோடிக்கப்பட்ட செய்திகள் மூலம் இந்த பாராளுமன்றத்தையும் மற்றும் உறுப்பினர்களையும் அபகீர்த்திக்கு உள்ளாக இடமளிக்க வேண்டாமென கேட்டுக்கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டார். 

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் விமல் வீரவன்ச கூடுகையில், 

இந்த விடையம் குறித்து நான் எழுத்து மூலமாக கோரிக்கை முன்வைத்துள்ளேன். மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டதாக 118 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் உள்ளதாக கூறப்படுகின்றது. இவர்கள் யாரென்று தெரியாத வரையில் பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவர் மீதும் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியுள்ள நிலைமை எழுந்துள்ளது. ஆகவே இப்போது உங்களிடம் வழங்கப்பட்டுள்ள 10 பக்கங்களை கொண்ட அறிக்கையில் இந்த பெயர் விபரங்கள் உள்ளதா? அவ்வாறு இருந்தால் அவற்றை எமக்கு காட்டுங்கள். இவ்வாறு பகுதி பகுதியாக பக்கங்களை காட்டி முழுமையாக இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம், பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களிடம் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு செயற்படுங்கள் என்றார்.

இதன் போது பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறுகையில்:- எமக்கு கிடைத்துள்ள பக்கங்களில் அவ்வாறு எந்தவொரு அறிக்கையும் இல்லை. எவரதும் பெயர் குறிப்பிடப்படவில்லை எனக் குறிப்பிட்டார். 

சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல கூறுகையில்,  

இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது 10 பக்கங்கள் மட்டுமேயாகும். எனினும் சீ 1இல் இருந்து 349 ஆம் பக்கம் வரையிலும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை. அனைத்துமே எமக்கு கிடைக்க வேண்டும். தப்பித்துக்கொள்ள அல்லது சமாளிக்க தெரிவுசெய்யப்பட்ட பக்கங்களை மாத்திரம் அனுப்புவது தவறானது எனக் குறிப்பிட்டார். 

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவித்த ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கூறுகையில், இப்போது பத்து பக்கங்கள் மட்டுமே வந்துள்ளது என்றால், இன்னும் 349 பக்கங்கள் வரவுள்ளது என்றால் அந்த பக்கங்களை பாராளுமன்றத்தில் எமக்கு பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியினை உங்களால் வழங்க முடியுமா என  சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினார் . 

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறுகையில்,

குறித்த அறிக்கையினை வழங்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளரிடம் நான் கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளேன். மீண்டும் இந்த விவகாரம் குறித்து கோரிக்கை விட முடியும். ஜனாதிபதியின்  செயலாளர் வெளிநாட்டு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள காரணத்தினால் அவர் வந்தவுடன் மீண்டும் வலியுறுத்துவேன் என என்னால் வாக்குறுதி வழங்க முடியும் எனக் குறிப்பிட்டார். 

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்து கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கூறுகையில்,

இல்லாத காரணி ஒன்றினை கூறி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அவமதிக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. ஆகவே உண்மையில் யார் பணம் பெற்றுக்கொண்டனர் என்ற காரணிகளை சபையில் அறிவிப்பதே சரியான தீர்வாக அமையும் எனக் குறிப்பிட்டார். 

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நளின் பண்டார கூறுகையில்,

அறிக்கை வேண்டும் என் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டு வருகின்றனர். எமக்கும் இந்த தேவை உள்ளது. நூறு  நாட்கள் அரசாங்கம் அமைத்த போது ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் 42 உறுப்பினர்களே இருந்தோம். அதிகமான உறுப்பினர்கள் இப்போது எதிர்க்கட்சி பக்கமே உள்ளனர். ஆகவே நீங்கள் அறிக்கையை வெளியிடுவதன் மூலமாக கூச்சலிடும் நபர்களில் யார் யார் பணம் பெற்றுக்கொண்டனர்  என்பதையும் தெரிந்துகொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார். 

சபையில் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறுகையில், பணம் பெற்றவர்கள், தொலைபேசி அழைப்பு விடுத்தவர்களின் பெயர் விபரங்களை இன்று சபையில் வெளியிடப்படும் என நாம் நம்பினோம். இப்போது வரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரிகளிடம் இரகசிய பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். 24பேர் காசோலையை மாற்றியுள்ளனர் என விசாரணைகள் இடம்பெற்றுள்ளது. 

கோப் குழுவில் உள்ள நபர்கள் மீதும் இவ்வாறு விசாரணை நடந்துள்ளது. ஆகவே கோப் குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் நாம் இந்த ஊழலுடன் தொடர்பு படவில்லை என எழுத்துமூல வாக்குமூலத்தை சபையில் முன்வைக்கின்றோம். ஏனைய கோப் குழு  உறுப்பினர்களும் மனசாட்சிக்கு அமைய வாக்குமூலம் வழங்க வேண்டும், குற்றவியல் குற்றங்களில் தொடர்புபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் பாராளுமன்ற குழுக்களின் பதவிகளில் இருக்க முடியாது என கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார். 

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கூறுகையில்,

உண்மையான குற்றவாளிகள் யார் என்பது வெளிபடுத்தப்படாத வரையில்  இந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுவதானால் பயனில்லை. யாராக இருந்தாலும் அவர்களின் பெயர் விபரங்களை வெளிபடுத்த வேண்டும். இல்லையேல் பாராளுமன்றதின் 225 உறுப்பினர்களின் மீதும் குற்றம் சுமத்தப்படும். இப்போதே சமூக தளங்களில் ஒவ்வொரு உறுப்பினர்களின் பெயரையும் குறிப்பிட்டு பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த விடயத்தை விரைவில் வெளிபடுத்துங்கள். அதேபோல் கடந்த  2010 ஆம் ஆண்டு தொடக்கம்  அர்ஜுன்  அலோசியசுடன்  உரையாடிய நபர்கள் அனைவரதும் பெயரை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஜித் பெரேரா கூறுகையில்,  

குற்றவியல் குற்றங்களில் தொடர்புபட்டதாக சந்தேகப்படும் நபர்கள் பாராளுமன்ற குழுக்களின் பதவிகளில் இருக்க முடியாது என  கூறினார். ஆனால் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் குற்றவியல் குற்றங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நபர்கள். ஆகவே பாராளுமன்றதில் எந்த குழுவிலும் குற்றவியல் குற்றத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகப்படும் எவரையும் நியமிக்க வேண்டாம் என தெரிவித்தார். 

மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய மஹிந்தானந்த அழுத்கமே கூறுகையில்,

என்மீது குற்றச்சாட்டு உள்ளது. அது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதனை நான் பார்த்துக்கொள்கின்றேன். ஆனால் இப்போது விசாரிக்கப்படும் 24 உறுப்பினர்களின் பாதுகாப்பு பிரிவினரில் அஜித் பெரேராவின் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளார் எனக் குறிப்பிட்டார். 

மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அஜித் பெரேரா கூறுகையில்,

இந்த கருத்தினை நான் முழுமையாக மறுக்கின்றேன். விசாரிக்கப்பட்ட நபர்களின் எனது பாதுகாப்பு பிரிவினர் எவரும் இல்லை. பணம் பெறவும் இல்லை, தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடவும் இல்லை, அவரை நான் கண்டதில்லை எனக் குறிப்பிட்டார். 

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்தன கூறுகையில்,

ஒருசில உறுப்பினர்கள் மாத்திரம் அர்ஜுன் ஆலோசியசிடம் பணம் பெற்றதாக கூறப்படும் நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் மீதும் தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. ஆகவே எமது நிலைமைகளை கவனத்தில் கொண்டு உண்மையான தகவல்களை வெளிபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

வாசுதேவ நாணயகார எம்.பி ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கூறுகையில்,

நாம் இங்கு வாத விவாதம் செய்து  மோதிகொண்டுள்ள நிலையில் உண்மையான கள்ளரான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சொகுசாக வாழ்ந்துகொன்டுள்ளார் எனக் குறிப்பிட்டார். 

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகையில்,

ஒரு சிலர் செய்த தவறால் அனைவரதும் பெயர் சீரழிக்கப்படுகின்றது. ஆகவே குற்றவாளி யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதில் எம்மத்தியில் எந்த எதிர்ப்பும் இல்லை எனக் குறிப்பிட்டார். 

மீண்டும் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய விமல் வீரவன்ச கூறுகையில்,

மத்திய வங்கி ஊழல் குறித்த முழுமையான அறிக்கையும், இப்போது வழங்கப்பட்டுள்ள பகுதி அளவிலான அறிக்கையும் வெகு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாவிட்டால் ஜனாதிபதியின் பெயரும் இந்த அறிக்கையில் உள்ளதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழும். ஆகவே உடனடியாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்த அறிக்கையினை பெற்றுக்கொண்டு உண்மைகளை வெளிபடுத்துங்கள் எனக் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08