வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பிரிவின்கீழுள்ள பளை வீமன்காமன் வடக்கு பகுதி முழுமையாக மக்கள் மீள்குடியேறுவதற்கு அப்பகுதியிலுள்ள பொலிஸார் தடையாகவுள்ளனர்.

 பொலிஸார் அவ்விடத்தில் இருந்து வெளியேறுவார்களானால் அப்பகுதியில் முழுமையான குடியேற்றம் இடம்பெறும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சேமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்தார். 

வலிகாமம் வடக்கு பளை வீமன்காமன் பகுதி விடுவிக்கப்பட்டமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

வலிகாமம் வடக்கில்  கடந்த 28 வருடங்களாக இராணுவத்தினரின் பாவனையில் இருந்த 33 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 17 வீடுகள் சிறியசேதங்களுடன் விடுவிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சேவையாளரிடம் மீளக்குடியேறுவதற்காக பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் ஏனைய இடங்களையும் விடுவிக்கவேண்டும் என கேட்டு வருகின்றார்கள். 

குறிப்பாக காங்கேசன்துறை நகரத்தில்மக்கள் முழுமையாக குடியேறுவதற்கு நகரத்திலுள்ள 515ஆவது பிரிகேட் வெளியேற்றப்படுவதுடன் ஏனைய பகுதிகளும் படிப்படியாக விடுவிக்கப்படும் . மேலும்   சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட நிலங்கள் இராணுவத்தினாரால் விடுவிக்கப்படவேண்டியுள்ளது. குறிப்பாக மயிலிட்டி சார்ந்த கடலோரப் பகுதிகளும் பலாலி வடக்கின் மிகுதிப் பகுதிகளும்  மற்றும் விவசாய நிலங்களும் விடுவிக்கப்படுவதன் மூலம் வலிகாமம் வடக்கினுடைய மீள்குடியேற்றம் முழுமையடையக்கூடியதாக இருக்கும்.

நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்ட பளை வீமன்காமன் வடக்கு பகுதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில இடங்களில் பொலிஸார் தொடர்ச்சியாக நிலைகொண்டிருப்பது மக்களுக்குத் தடையாக இருக்கின்றது. குறித்த பொலிஸார் அவ்விடத்திலிருந்து வெளியேறுவார்களாயின் பளை வீமன்காமன் வடக்கு பகுதி முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படும் தற்போது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் 17 வீடுகள் மக்கள் பாவனைக்குகந்ததாக இருக்கின்றபோதிலும் சுமார் 25 குடும்பங்கள் உடனடியாக மீள்குடியேறுவதற்கு தமது பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் ஏனைய மக்களும் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றார்.