இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையை இடைகால நிர்வாகமொன்றிடம் கையளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஐ.சி.சி.யின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இடைக்கால நிர்வாக சபையை ஐ.சி.சி.  ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அமைச்சர் ஐ.சி.சி. அதிகாரிகளை சந்திப்பதற்காக தLபாய் செல்லவுள்ளார்.

ஐ.சி.சி.யின் சிரேஸ்ட அதிகாரிகளை விளையாட்டுத்துறை அமைச்சர் சந்திப்பார். அதன்போது இடைக்கால நிர்வாக சபையொன்றை நியமிப்பதால் பாதிப்பு இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்துவார் என விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையுடனான சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளான கமல் பத்மசிறி, ஆஸ்லி டி சில்வா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த முக்கிய சந்திப்பானது நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

ஐ.சி.சி.யின் தலைவர் சாஷாங் மனோகருடன் இடம்பெறும் சந்திப்பில்,  இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுக்க எடுக்கும் முயற்சி தொடர்பில் பேசப்படவுள்ளது.

இதேவேளை அமைச்சர் டுபாயில் ஐ.சி.சி. அதிகாரிகளை சந்திக்கவுள்ளதை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.