நீட் தேர்வை ரத்து செய்யும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது என்று பிரதீபாவின் பெற்றோர் வலியுறுத்திய நிலையில் அந்த மாணவியின் உடலுக்கு உடற்கூறாய்வு சோதனை நிறைவு பெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர் பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்களை பெற்றுள்ளார். எனினும் நீட் தேர்வில் அவர் தேர்ச்சி பெற முடியவில்லை.

இதனால் மருத்துவ கனவுடன் இருந்த பிரதீபாவின் மனம் வெம்பியது. இதையடுத்து அவர் எலி மருந்தை குடித்தார். பின்னர் திருவண்ணாமலை  வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து பிரதீபாவின் பெற்றோர் கூறுகையில், நீட் தேர்வு ரத்து செய்யும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது. நீட் தேர்வால் உயிர் பலிகள் தொடருகின்றன.

உயிர்கள் பறிபோவதை தடுக்க நீட் ரத்து அவசியம் ஆகும். நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிட்டுவிட்டனர். இதனால் எங்களது மகளை பாதுகாக்க முடியாமல் பறிகொடுத்துவிட்டோம். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பிரதீபாவின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர், உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் பிரதீபாவுக்கு திருவண்ணாமலை அரசு வைத்தியசாலையில்  உடற்கூறாய்வு சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கு அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களது நிபந்தனைகளை அரசு நிறைவேற்றும் வரை உடற்கூறாய்வு செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொலீஸார் அவர்களை கைது செய்தனர். பின்னர் பிரதீபாவின் உடலுக்கு திருவண்ணாமலை அரசு வைத்தியசாலையில் அரை மணி நேரம் உடற்கூறாய்வு நடைபெற்றது.