சிங்கப்பூரில் திட்டமிட்டபடி எதிர்வரும் 12ஆம் திகதி, வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநிறுத்த தென் கொரியா கடும் முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேச முடிவானது.

ஆனால் கடந்த மாதம் தொடக்கத்தில் தென் கொரியாவும் அமெரிக்காவும் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டன. மேலும், பேச்சுவார்த்தைக்கு முன்னர் எல்லா அணுஆயுதங்களையும் அழித்துவிட வேண்டும் என்று ட்ரம்ப் நிபந்தனை விதித்தார்.

இதனால் கோபம் அடைந்த கிம் பேச்சுவார்த்தை பேச்சில் இருந்து விலகுவேன் என்று எச்சரித்தார். இந்நிலையில் ட்ரம்ப்பை சந்தித்து தென் கொரிய அதிபர் மூன் சமாதானப்படுத்தினார்.

இந்நிலையில் கிம் ஜாங் உன்னின் நல்ல நண்பராக கருதப்படும் கிம் யாங் சோல், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா சென்றார். வெள்ளை மாளிகையில் உள்ள அதிபரின் ஓவல் அலுவலகத்தில் கிம் யாங்கை, அதிபர் ட்ரம்ப் சந்தித்தார்.

அப்போது, அதிபர் கிம் ஜாங் உன் கொடுத்தனுப்பிய கடிதம் ஒன்றை அதிபர் ட்ரம்ப்பிடம் கிம் யாங் சோல் வழங்கினார். அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கிம் கேள்வி எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர் சுமூகமான பேச்சு வார்த்தையின் பின்னரே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.