எம்.எம்.மின்ஹாஜ்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைமைத்துவத்தையே களமிறக்குவோம். கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினால் அது எமக்கு சவலாக அமையாது.2015 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷவுடன் போட்டியிடுவதனை கடினம் என்றே கூறினர். ஆனால் நாம் வெற்றியீட்டினோம். ஆகவே 2020 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கட்சி என்ற வகையில் பொறுப்புடன் செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பின் அடுத்த கட்டமாக ஊடக மத்திய பிரிவு நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். இந்த ஊடக பிரிவின் செயற்பாட்டுக்கு சத்தியம் என பெயரிடப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் மேலும் உரையாற்றுகையில்,

கட்சியின் மறுசீரமைப்பு ஒரு அங்கமாக ஊடக பிரிவொன்றை நாம் ஸ்தாபித்துள்ளோம். இதன்னூடாக சத்தியத்தை நாம் வெளிக்கொண்டு வரவுள்ளோம். அரசாங்கத்தின் குறைப்பாடுகள் மாத்திரமே ஊடகங்கள் காட்டப்படுகின்றன. எனினும் அரசாங்க நலன் சார்ந்த விடயங்கள் காண்பிக்கப்படுவதில்லை. பாடசாலை மட்டத்தில் நாம் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 

நாம் ஆட்சியை பொறுப்பேற்கும் போது பத்தாயிரம் பாடசாலைகளில் 60 வீதமானவைகளுக்கே மின்வசதிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் அதனை நாம் 98 வீதமாக அதிகரித்துள்ளோம். இவ்வருடத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் மின்வசதிகளை வழங்குவோம். அத்துடன் பாடசாலை மட்டத்தில் 26 ஆயிரம் மலசல கூடங்கள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான விடயங்கள் ஒருபோதும் ஊடகங்களின் ஊடாக வெளிவரவில்லை. 

தற்போது நாம் ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்தி தந்துள்ளோம். அதனை உரிய முறையில் ஊடகங்கள் பிரயோகம் செய்வது கிடையாது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது அரச ஊடகமொன்று அதனை பெரிதாக காண்பிக்கவில்லை. எனினும் அன்றைய தினம் ஜனாதிபதியினதும் எதிர்க்கட்சியினருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சத்தியத்தை வெளிப்படுத்த ஊடக பிரிவை ஸ்தாபித்துள்ளோம். இதன்பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இலகுவான முறையில் கட்சியினதும் அரசாங்கத்தினதும் செய்திகள் பெற்றுக்கொள்ள முடியும். 

அத்துடன் தற்போது நாம் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை துரிதமான முன்னெடுத்து வருகின்றோம். இன்னும் நான்கு மாதங்களில் கிராம மட்டத்திலான மன்றங்களை பூர்த்தி செய்யவுள்ளோம்.  இளைஞர் அணியை நாம் மீண்டும் பலப்படுத்தவுள்ளோம். சமுர்த்தி கிடைக்காத 2 இலட்சம் பேருக்கு சமுர்த்தி வழங்கப்படும். 2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கு நாம் தற்போது தயாராகி வருகின்றோம். நாம் வெற்றிவாகை சூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

ஐக்கிய தேசியக் கட்சி திருடர்களை பாதுகாக்கவில்லை. குற்றச்சாட்டு வந்த பழிக்கும் குற்றவாளியாக முடியாது. 

தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில் கருத்து முரண்பாடுகள் இருக்கும். எனினும் நாம் கட்சி என்ற வகையில் பொறுப்புடன் செயற்படுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தையே நாம் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். இதன்போது கோத்தாபய ராஜபக்ஷ களமிறங்கினால் அது எமக்கு சவால் இல்லை. 2015 ஆம் ஆண்டும் இவ்வாறே கேள்விகள் கேட்கப்பட்டது. எனினும் நாம் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிக்கொண்டோம். ஆகவே நாம் 2020 ஆம் ஆண்டில் வெற்றி வாகை சூடுவோம் என்றார்.