(எம்.எம்.மின்ஹாஜ்)

நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களை போன்று சுய மரியாதை இருந்தால் கோத்தாபய ராஜபக்ஷ இப்போதாவது தமது பூர்வீக பூமியான அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து கொண்டு பொய்களை கூறி குழப்பம் ஏற்படுத்த முனைய கூடாது என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பின் அடுத்த கட்டமாக ஊடக மத்திய பிரிவு இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள ஊடகங்கள் சத்தியத்தை வெளிப்படுத்த வேண்டும். நான் கோத்தாபய ராஜபக்ஷ தொடர்பான வழக்குகள் குறித்து அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த போது இலத்திரனியல் ஊடகங்கள் அதனை வெளியிட்டன. ஆனால் அச்சு ஊடகங்களில் சிங்கள பத்திரிகை கோத்தாபயவிற்கு பயந்து அதனை வெளியிடவில்லை. 

தனக்கு சொகுசான மாட மாளிகைகள் இருந்தால் நிரூபிக்குமாறு கோத்தாபய ராஜபக்ஷ சவால் விடுத்த போது அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கமாக அந்த சவாலை ஏற்றுக்கொண்டு கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகையின் மின்சார கட்டண பட்டியலை எடுத்து வந்து காண்பித்தார். அவரின் பெயரில் மாளிகை இல்லையென்றால் எமது மின்சார சபை வேறு வேலையில்லையா? அவரது பெயருக்கு கட்டண பட்டியல் அனுப்ப என்ன கஷ்டம் உள்ளது? இராணுவத்தை வைத்து குறித்த மாளிகையை நிர்மாணித்ததாக அப்பகுதியிலுள்ள பிக்குகளும் கூறுகின்றனர். 

எனவே நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களை போன்று சுய மரியாதை இருந்தால் இப்போதாவது தமது பூர்வீகபூமியான அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும். இங்கிருந்து கொண்டு பொய்களை கூறி குழப்பம் ஏற்படுத்த முனைய கூடாது.

கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பில் கூறுவதற்கு இன்னும் பல விடயங்கள் உள்ளன. அதனை படிப்படியாக வெளிப்படுத்துவோம். ஆகவே அவசரப்பட தேவையில்லை என்றார்.