(ஆர்.யசி)

பிரதி சபா­நா­யகர் தெரி­விற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இராமநாதன் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்பினர் சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்ளே அந்த பத­விக்கு நியமிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்­புகள் உள்­ள­தாக தெரி­கின்­றது. அதேபோல் பிரதி சபா­நா­யகர் பத­விக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியும், கூட்டு எதிர்க்­கட்­சியும் தமது தரப்பில் எவ­ரையும் பரிந்­து­ரைப்­ப­தில்லை என்று முடிவு செய்துள்ளதாக நம்­ப­க­மாக தெரி­ய­வ­ரு­கின்­றது. 

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­பட்டு தோற்­க­டிக்­கப்­பட்ட பின்னர் தமிழ் - சிங்­கள புத்தாண்டு வாரத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தை ஒத்­தி­வைத்­தி­ருந்தார். இதன்போது பிரதமருக்கும் ஆத­ர­வாக வாக்­க­ளித்த ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் உறுப்­பி­னர்­களின் ஒரு­வ­ரான முன்னாள் பிரதி சபா­நா­யகர் தனது பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தார்.  

இதன் பின்னர் பிரதி சபா­நா­யகர் ஒருவர் இல்­லாது எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தின் இரண்டாம் அமர்­வுகள் முன்­னெ­டுக்கப் பட்டு வரு­கின்ற நிலையில் நாளை செவ்­வாய்க்­கி­ழமை கூடும் பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் பிரதி சபா­நா­யகர் ஒரு­வரை நிய­மிக்க வேண்­டிய கட்­டாயம் உள்­ளது.

புதி­தாக பிரதி சபா­நா­யகர் ஒரு­வரை நிய­மிக்­க­வுள்­ள­தாக சபா­நா­யகர் கருஜெய­சூ­ரிய தெரி­வித்­துள்ள நிலையில் யாரை நிய­மிப்­பது என்­பதில் பிர­தான கட்­சிகள் இடையே கடந்த காலத்தில் முரண்­பா­டுகள் ஏற்­பட்­டி­ருந்­தன.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அங்­கஜன் இரா­ம­நாதன் பெயர் ஆரம்­பத்தில் ஜனா­தி­ப­தி­யினால் பரிந்­து­ரைக்­கப்­பட்­ட­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் மொன­ரா­கலை மாவட்ட பாராளுமன்ற உறுப்­பினர் ஆனந்த குமா­ர­சி­றியின் பெயரும் கடந்­த­வாரம் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருந்­தது. கடந்த பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் போது கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட அங்­கஜன் இரா­ம­னா­தனை நிய­மிப்­ப­தற்கு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் சுயா­தீ­ன­மாக செயற்­படும் 16 பேர் கொண்ட அணி­யி­லி­ருந்து பாராளுமன்ற உறுப்­பினர் சுதர்­ஷினி பெர்­னாண்­டோ­புள்­ளயை நிய­மிக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரையே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் நிய­மிக்க கட்­சி­யிலும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவ்­வ­ணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசா­நா­யக தெரி­வித்­துள்ளார். 

எவ்­வாறு இருப்­பினும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் ஆனந்த குமா­ர­சி­றியின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்ள போதிலும் ஐக்­கிய தேசியக் கட்சி  இந்த விட­யத்தில் விட்டுக் கொடுப்பை மேற்­கொள்ள உள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கூட்டு எதிர்க்­கட்சி சார்பில் ஒரு­வரை பரிந்­து­ரைக்­கப்­போ­வ­தில்லை எனவும் அக்­கட்சி உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

ஆகவே நாளை கூட­வுள்ள பார­ளு­மன்ற அமர்­வு­களின் போது ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் சார்பில் சுதர்­ஷினி பெர்னாண்டோபுள்ளே பிரதி சபா­நா­ய­க­ராக தெரி­வு­செய்­யப்­ப­டுவார் என தெரிய வரு­கின்­றது.