(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாத பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 2020 ஆம் ஆண்டு அரசியல் அதிகாரத்தினை பெற்றுக் கொடுக்கும் ‍நோக்கிலேயே மக்கள் விடுதலை முன்னணியினர் 20 ஆவது அரசியல் திருத்தத்தினை முன்வைத்துள்ளனர் என  பிவிதுரு ஹெல உருமயக் கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

மக்கள் விடுதலை முன்னணியினர் பிரதமரின் விருப்பத்துக்கு இணங்கவே 20 ஆவது திருத்தத்தினை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளனர். 

பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டும் என்ற விடயத்திற்கு எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் குறித்த திருத்தம்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற வேண்டும். ஆனால் தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் முன்வைத்துள்ள இந்த திருத்தத்துக்கு எதிர்ப்புகளே அதிகளவு தோன்றியுள்ளது. 

எனினும் இவ் விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் சூழ்ச்சிகளை பிரயோகிப்பார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனையின்போதும் பண பலத்தினை பிரயோகித்து நம்பிக்கையில்லா பிரேரணையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். 

எவ்வாறு இருப்பினும் 20 ஆவது திருத்தம் ஒரு போதும் வெற்றிபெறாது. இவ்விடயம் தொடர்பில் பொது மக்களின் ஆதரவினை பெற்று மக்கள் விடுதலை முண்ணியின் திட்டங்களை தோற்கடிக்க பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது என்றார்.