வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்று நகரசபையின் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து கடந்த ( 22.03.2018) அன்று வவுனியா நகர சபை செயலாளரின் தலைமையில் குறித்த கட்டட வேலைகள் நிறுத்தப்பட்டதுடன் கட்டட வேலைகளிற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந் நிலையில் இன்றைய தினம் மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையம் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா நகரசபையில் பொதுமகனொருவர் முறைப்பாடு செய்தமையடுத்து குறித்த வர்த்தக நிலையத்திற்கு விரைந்த வவுனியா நகரசபை ஊழியர்கள்  வர்த்தக நிலையத்தினை மூடுமாறு உத்தரவு பிறப்பித்தனர். அதனையடுத்து குறித்த வர்த்தக நிலையம் மூடப்பட்டது.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தலைவர் கெளதமன் அவர்களிடம் வினாவிய போது,

இவ் வர்த்தக நிலையத்திற்கு நாங்கள் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை, இன்று இவ் வர்த்தக நிலையம் அத்து மீறியே திறக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் சனிக்கிழமை என்பதனால் வருகின்ற திங்கட்கிழமை குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.