(எம்.சி.நஜிமுதீன்)

2020 இல் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளரை எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று மாலை மல்வத்து விகாரைக்குச் சென்று மல்வத்து மகாநாயக்க  திப்பட்டுவாபே சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றதுடன் அஸ்கிரி விகாரைக்குச்சென்று அஸ்கிரி மகாநாயக்க வறகாகொட ஸ்ரீஞானரத்ன தேரர் உட்பட சங்க சபை உறுப்பினர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"அரசியலமைப்பின் இருபதாவது திருத்தமானது நாட்டை சீர்குலைக்கும் வகையில் முன்வைக்கப்பட்ட திருத்தமாக உள்ளது. எனவே தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பாரளுமன்றில் இருபாதாவது திருத்தம் மீதான எதிர்பார்ப்பு கானல்நீர் போன்றதாகும்.

மேலும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள அபேட்சகர் குறித்து பலரும் பல்வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எனினும் நாம் எதிர்வரும் நவம்பர் மாதம் அபேட்சகரை வெளியிடுவோம். ஜனாதிபதி அபேட்சகரை ஏற்கனவே வெளியிட்டு அதனை சுருக்கிக்கொள்வதற்கு நாம் தயாரில்லை. அதனால் உரிய நேரத்தில் அதனை நாம் வெளியிடுவோம்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.