(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியம் நான்காவது தடவையாக இலங்கைக்கு 252 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் மூன்று வருடங்களுக்கு விரிவாக்கப்பட்ட நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான இலங்கை பொருளாதாரத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழு நான்காவது மீளாய்வினை நிறைவுசெய்துள்ளது. இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்குவதற்கான மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட திட்டமானது 2016ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் உத்தியோபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவ்வகையில் தற்போது 252 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளை நான்காவது தடவையாக மீளாய்வு செய்த கூட்டத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ இயக்குநர் மிட்சுகிரோ புறுசவா குறிப்பிடுகையில்,

இலங்கையானது நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க முக்கியமான முன்னேற்றங்களை பதிவுசெய்துள்ளது. நிதி ஒருங்கிணைப்பினை ஏற்படுத்துவதற்கான கொள்கைத்திட்ட உருவாக்கம், விவேகமான பணக்கொள்கை,உட்கட்டமைப்பு வசதி விரிவாக்கத்தின் உதவியுடனான பொருளாதார விருத்தி ஆகியவற்றை இலங்கை உறுதியுடன் செயற்படுத்தியுள்ளது என்றார். 

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு இதுவரை 1014 அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.