இயக்குநர் பிரம்மா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'குற்றம் கடிதல்' திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்றது என்பது அனைவரும் அறிவோம். அதுமட்டுமின்றி பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் கலந்து கொண்டு பல விருதுகளை குவித்தது. ஒரு ஆசிரியையின் அவசர செயல் காரணமாக ஒரு சிறுவனின் உயிர் ஊசலாடுவதை இந்த படத்தில் மிக பிரம்மாதமாக பிரம்மா இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் பிரம்மா அடுத்ததாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் அவர் ஜோதிகாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

'36 வயதினிலே' படத்திற்கு பின்னர் நல்ல கதைக்காக காத்திருந்த ஜோதிகா, பிரம்மாவின் கதையை கேட்டு அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. எனவே மிக விரைவில் ஜோதிகாவின் அடுத்த படம் குறித்த தகவலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்ற செய்தி தற்போது பரவி வருகிறது.