(எம்.சி.நஜிமுதீன்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் எதிர்காலத்தில் அமையவுள்ள ஆட்சியில் சட்ட திட்டங்களை மாற்றியாவது மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் மறைந்திருக்கும் தகவல்களை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். மேலும் அம்மோசடியுடன் தொடர்புபட்ட சகலருக்கும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

 

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தை மூடி மறைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இலஞ்சம் பெற்றமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசியாவிலேயே மிகப்பெரிய மோசடியாக மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடியே உள்ளது. அதனால் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. ஆகவேதான் தினந்தோறும் மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்படுகிறது. மேலும் குறித்த மோசடியை மூடி மறைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏராளமானோர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. 

மோசடியை மூடி மறைப்பதற்கு அதிகளவானோருக்கு இலஞ்சம் வழங்கப்பட்டதன் மூலம் எந்தளவு பெரிய மோசடி இடம்பெற்றுள்ளது என்பதை ஊகித்துக்கொள்ள முடியும். ஊழல் மோசடியை ஒழிப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கமே மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. 

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ளார். அவரை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் அக்கறை காட்டுவதாக இல்லை. அவர் அங்கிருப்பதையே அரசாங்கம் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.