2015 ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் அவர்  அம்பாந்தோட்டைக்கு செல்வதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஹெலிக்கொப்டர் ஏற்பாடு செய்து கொடுத்தார் என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்திருப்பது உண்மையில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தேர்தலில் தோற்ற பின்னர் அம்பாந்தோட்டைக்கு செல்வதற்கு மகிந்த ராஜபக்சவே ஹெலிக்கொப்டரை கோரினார் என அவரின் குடும்பத்தவர்களிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிசேன 9 ம் திகதி மாலையே சத்தியப்பிரமாணம்  செய்தார் அதுவரை மகிந்தராஜபக்சவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக காணப்பட்டார், என தெரிவித்துள்ள ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்தவர்கள் வழமை போன்று அவர் தனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்த திச விமலசேனவிடம் ஹெலிக்கொப்டரிற்கு உத்தரவிட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 2016 ஏப்பிரல் 9 ம் திகதி ஆற்றிய உரையொன்றின் போது மகிந்த ராஜபக்சவிற்கு அம்பாந்தோட்டை செல்வதற்கான ஹெலிக்கொப்டர்களை வழங்கியது நானே என சிறிசேன தெரிவித்துள்ளதையும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உலகின் எந்த நாட்டிலும் தோல்வியடைந்த ஜனாதிபதி தனது வீட்டிற்கு செல்வதற்கு இரு ஹெலிக்கொப்டர்களை வழங்கியதில்லை என சிறிசேன குறிப்பிட்டிருந்தார் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.