புத்தளத்தில் இயங்கும் வடக்கு பாடசாலைகளில் கடமைபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தக் கோரும் பிரேரணைாயனது சட்டவிரோதமானதுடன் மனிதாபிமானமற்ற செயலாகும். எனவே இதனை உடனடியாக மீளப்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.

வட மாகாண நிர்வாகத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் இயங்கும் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள்  மற்றும் உதவியாளர்களின் கொடுப்பனவுகளை நிறுத்தும்படி வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்தம்பி தவரசா நேற்று கையளித்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

வடக்கில் நலிவுற்றிருக்கும் தமிழ், முஸ்லிம் உறவை நாம் சீர் செய்வதற்கு முயற்சித்து வருகின்றோம். முஸ்லிம் மக்களோடு தொடர்புடைய விடயங்களை மிகவும் கவனமாக கையாளவேண்டும்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்கள் அதிக பாதிப்புக்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள். 1990 வெளியேற்றம் குறித்து போதுமான சட்ட நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. 

2009 ஆம் ஆண்டுக்குப் பின் முஸ்லிம் மக்கள் வடக்கிற்கு மீள்குடியேறத் தொடங்கியிருக்கின்றார்கள். மீள்குடியேறாத மக்களின் நலன்கள் கருதி ஒரு சில சேவைகளை வடக்கு மாகாணத்தினூடாக அந்த மக்களுக்கு வழங்குவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கிருக்கும் அசிரியர்கள் தாங்கள் வடக்கு மாகாணப் பாடசாலைகளியே கடமையாற்றுவோம் என்று பிடிவாதம் பிடிக்கவில்லை, அவர்களுக்கான மீள்குடியேற்ற வாய்ப்புகள் போதுமான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை, காணிகள் இல்லை, வீடுகள் இல்லை என்ற நிலை இன்னமும் இருக்கின்றது.

இந்த நிலையில் அங்கு பணியாற்றுகின்றவர்களின் வயிற்றில் கைவைக்கும் விடயத்தையே இந்தப் பிரேரணையின் மூலம் முன்வைக்கின்றார்கள். இதனை நான் நிராகரிக்கின்றேன்.

மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எத்தகையது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். அதன் பிரகாரமே அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இந்த பிரேரணை சட்டவிரோதமானது இதனை இங்கிருந்து நீக்க வேண்டும் என்றார்.  

குறித்த பிரேரணை தொடர்பாக வட மாகாண சபையின் விவாதங்கள் நடத்தப்பட்டு பிரேரணை மீளப்பெறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.