கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி முன்மாரி விடுதிக் கல் பகுதியில் அடி காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின்  சடலம் வீட்டினுள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளைகள் மேல் சந்தேகம்  எழுவதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

சுமார்  40 வயது மதிக்கத்தக்க 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தைவேல் குருசாந்த ராஜா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று மாலை 4 மணியளவில் குறித்த வீட்டில் இருந்த உயிரிழந்தவரின் மனைவியின் முதல் கணவரின் பிள்ளைகளுடன் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் அதன் போதே இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாமெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மனைவி அனுராதபுரத்தில் உள்ள தனது பெண் பிள்ளைக்கு பிரசவத்திற்காக சென்றிருந்த நிலையில் குறித்த நபரும் அவரது மூன்று பிள்ளைகளுடன் மனைவியின் மூத்த கணவரின் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்துவந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்த நபர் மதுபோதையில் பிள்ளைகளுடன் சண்டையிட்ட நிலையில் மாலை அங்கிருந்து ஐந்து பிள்ளைகளும் அனுராதபுரத்திற்கு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியினால் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு சென்றுபார்த்தபோது குறித்த நபர் அடிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டார்.

இந் நிலையில், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் குற்றத்தடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்துடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் பணிப்புரை விடுத்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவியின் முதல் கணவனின் பிள்ளைகள் இருவர் மீது சந்தேகம் நிலவுவதன் காரணமாக அனுராதபுரத்தில் உள்ள அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.