வடக்கில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுமாறு வடமாகாண சபை இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணையைசபை ஏற்றுக்கொண்டுள்ளது.

வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டிய தேவையுள்ளது அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவேண்டும் என வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியை அதிகரிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் அதிகளவு தனியார் துறை முதலீடும் அவசியம் மேலும் தனியார் துறையினர் அதிகளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஊக்குவிக்கப்படவேண்டும் எனவும் வடமாகாண சபை தெரிவித்துள்ளது.

வடக்கு மக்களிற்கான புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான உள்கட்டமைப்புகளை உருவாக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் வடமாகாண சபை குறிப்பிட்ட தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.

கல்வி முன்னேற்றம், ,மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான  புதிய தொழில்நுட்பம் போன்றவற்றின் அவசியத்தையும் வடமாகாண சபை வலியுறுத்தியுள்ளது.

வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்குவதற்காக நிலத்தை ஒதுக்குவதற்கும் வடமாகாண சபை இணங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் முதலாவது தொழில்நுட்ப பூங்காவை உருவாக்குவதற்கு  உதவுமாறு  புலம்பெயர்ந்த தமிழர்களையும் அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகளையும் வடமாகாண சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.