சர்வதேச கிரிக்கெட் சபையின் உலக லெவன் அணியை மேற்கிந்தியத்தீவுகள் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிபெற்றுள்ளது.

  

ஐ.சி.சி. உலக பதினொருவர் மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகள் பங்கேற்று விளையாடிய ஒரேயொரு இருபதுக்கு-  20 கிரிக்கெட் போட்டி லண்டனின் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது அப்ரிடி விளையாடும் இறுதி சர்வதேச போட்டியாகும். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு பிரத்வையிட் அணித்தலைவராக செயற்படுகின்றார். 

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற உலக லெவன் அணியின் தலைவர் அப்ரிடி பந்துவீச்சை தெரிவு செய்தார்.

இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கியது.

இந்நிலையில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய மேற்கிந்தித்தீவுகள் அணியின் எவின் லெவிஸ் 58 ஓட்டங்களையும் சாமுவேல்ஸ் 43 ஓட்டங்களையும் ராம்தின் 44 ஓட்டங்களையும் எடுத்தனர். இறுதியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களைக் குவித்தது. உலக லெவன் அணி சார்பாக பந்துவீச்சில் ரஷித் கான் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 

இதன்மூலம் உலக லெவன் அணிக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியால் 200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய உலக லெவன் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக தமிம் இக்பால், லூக் ராங்கி ஆகியோர் களமிறங்கினர். 

2 ஆவது ஓவரை ரசல் வீசினார், அந்த ஓவரின் 3 ஆவது பந்தில் தமிம் ஆட்டமிழந்தார். அவர் 2 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தார். அதன்பின் சாம் பில்லிங்ஸ் களமிறங்கினார். 

பத்ரி வீசிய மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே ராங்கி டக் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக், அந்த ஓவரின் இறுதிப் பந்தில் டக் அவுட் ஆனார். 

அதன்பின் சொயிப் மாலிக் களமிறங்கினார். பில்லிங்ஸ் 4 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் ரசல் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ஓவர்களில் உலக லெவன் அணி 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்தது. அவரைத்தொடர்ந்து திசர பெரெரா களமிறங்கினார்.

அதன்பின் உலக லெவன் அணியினர் நிதானமாக விளையாடினர். 8 ஆவது ஓவரை பிரத்வெய்ட் வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்தில் மாலிக் ஆட்டமிழந்தார். அவர் 12 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதன்பின் பெரெராவுடன் அணித் தலைவர் அப்ரிடி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ஓட்டங்களைச்  சேர்த்தனர். இதனால் 10 ஓவர்கள் நிறைவில் உலக லெவன் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 63 ஓட்டங்களை எடுத்தது.

சிறப்பாக விளையாடிய பெரெரா 28 பந்தில் அரைச்சதம் அடித்தார். இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். தனது இறுதி சர்வதேச போட்டியில் விளையாடிய அப்ரிடி 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரஷித் கான் களமிறங்கினார். 

பெரெரா 37 பந்தில் 61 ஓட்டங்களை (7 பவுண்டரி, 3 சிக்ஸர்) பெற்று ஆட்டமிழந்தார். அதன்பின் மிச்செல் மெக்லினகன் களமிறங்கினார். அதே ஓவரின் ரஷித் கான் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சந்தீப் லமிச்சானே களமிறங்கினார். மெக்லினகன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டைமால் மில்ஸ் காயம் காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை. இதனால் உலக லெவன் அணி 16.4 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணி  சார்பில் பந்துவீச்சில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3 விக்கெட்களும், சாமுவேல் பத்ரி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர். இதன்மூலம் மேற்கிந்தியத்தீவுகள் அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.