(இரோஷா வேலு) 

வெள்ளவத்தையில் வீடொன்றிலிருந்து வங்கி கடனட்டை மற்றும் கொடுப்பனவு அட்டைகளை திருடி, மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவரை நேற்று வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹாமர்ஸ் அவன்யுவில் அமைந்துள்ள வீடொன்றில் பணிபுரியும் 53 வயதுடைய பொரலஸ்கமுவ பகுதியைச் சேரந்த பணிப்பெண் ஒருவரே இவ்வாறு வங்கி கடனட்டைகள் மற்றும் கொடுப்பனவு அட்டைகளை திருடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். 

தமது கடன் மற்றும் கொடுப்பனவு அட்டைகள் காணாமல்போயுள்ளதாக அவ் வீட்டின் உரிமையாளர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை அளித்த முறைப்பாட்டுக்கிணங்கவே விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோதே குற்றம் நிரூபனமானது.

இதன்போது காணாமல் போன கடன் மற்றும் ‍கொடுப்பனவு அட்டையை பயன்படுத்தி இவர் பெற்றுக் கொண்ட 661,496 ரூபாவும் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.