பீகாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற புத்தகயா பகுதியில் 2013ஆம் ஆண்டு அடுத்தடுத்து  நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

இக் குண்டு வெடிப்பு சம்பவத்தில்  உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும் பௌத்த  மதத் துறவிகள், வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலர் படு காயமடைந்தனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும் அந்த அமைப்பைச் சேர்ந்த இம்தியாஸ் அன்சாரி, ஹைதர் அலி, முஜீப் உல்லா, ஒமர் சித்திக், அசாருதீன் குரேஷி ஆகியோர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையில் மேற் குறிப்பிடப்பட்டவர்களால் தான் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது  என்பது உறுதியானது.

இந்நிலையில் குறித்த  வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பின்  சிறப்பு நீதிமன்றம் பயங்கரவாதிகள் 5 பேரையும் குற்றவாளிகள் என கடந்த வாரம் அறிவித்தது.

இதையடுத்து அவர்களுக்கு அளிக்கப்பட உள்ள தண்டனைகள் மீதான விசாரணை நீதிபதி மனோஜ் குமார் சின்ஹா முன்பு நேற்று  நடைபெற்றது.  அரசு தரப்பு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி தண்டனை விவரங்களை இன்று அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.