சர்வதேச சிகரெட் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு செயற்படுத்தப்படும் சமூர்த்தி கொடி செயற்திட்டத்தின் முதலாவது கொடியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

”புகைப்பழக்கத்தை தவிர்த்து, வறுமையை குறைத்து, அபிவிருத்தியை மேம்படுத்துவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் நேற்று முதல் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரை இக்கொடித்திட்டம் நாடு முழுவதும் செயற்படுத்தப்படுவதுடன், அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் போதைபொருள் ஒழிப்பு தொடர்பான விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த சமூர்த்தி கொடி விநியோகத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் பணத்தை சமூர்த்தி சமூகமைய அமைப்பின் அங்கத்துவத்தை பெற்றுள்ள குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் நலன்புரி செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட எதிர் பார்க்கப்படுகின்றது.

கடந்த வருட கொடித்திட்டத்தின் கீழ் அதிக நன்கொடையை பெற்ற இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவின் யக்துரே வலயத்தின் உஸ்ஸாவ சமூர்த்தி சமூக மைய அமைப்பின் சிறுமி ஒருவரால் ஜனாதிபதிக்கு இவ்வாண்டின் முதலாவது கொடி அணிவிக்கப்பட்டது.

அமைச்சர் பீ.ஹெரிசன், சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.ஆர்.டி.எச்.அநுரவங்ஷ உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இதனிடையே சர்வதேச மதுசார கொள்கை மாநாட்டினை எதிர்வரும் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான ஒப்பந்தம் நேற்று  முன்தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மாநாடு கடந்த வருடம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்றதுடன், அரச தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் போதை ஒழிப்புக்காக எடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகளை கௌரவிக்கும் விதமாக 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் இம்மாநாட்டை நிகழ்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன், மதுசாரம் மற்றும் போதைபொருள் தகவல் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமனசேகர ஆகியோரால் உரிய ஒப்பந்தம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கித்தலவராச்சியும் இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.