போத்தலில் கள் அடைப்பதற்கான உற்பத்தி வரியையும் அதற்கான அனுமதி வரியையும் அரசாங்கம் பல மடங்காக அதிகரித்ததை தொடர்ந்து குடாநாட்டில் தினசரி ஆயிரம் போத்தல்களுக்கும் அதிகமான கள் நிலத்தில் ஊற்றப்படுகின்றது. இதனால் 5000 க்கும் அதிகமான சீவல் தொழிலாளர் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடாநாட்டில் வருடா வருடம் ஜனவரி மாதத்திலிருந்து பனங்கள் சீசன் ஆரம்பமாவதைத் தொடர்ந்து பாவனையாளர்களுக்கு மிஞ்சிய பனங்கள்ளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் ஜப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் பயன்படுத்துவதற்காகப் போத்தல்களில் அடைக்கப்படுவதுடன் வடிசாராயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

குடநாட்டிலுள்ள 19 தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனவு கூட்டுறவுச் சங்கங்களில் 17 சங்கங்கள் கள் அடைக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றன. வலிகாமம் வரணி ஆகிய கொத்தணிக்கும் வடிசாராயத்தைத் தயாரித்து வருகின்றன. இத்தொழிற்சாலைகள் இயங்குவதனால் நூற்றுக்கணக்கான தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுகின்றது.

இந்த நிலையில் தற்போதைய அரசு வரவு செலவுத் திட்டம் மூலம் போத்தலில் கள் அடைப்பதற்கான வரியையும் அனுமதி பெறுவதற்கான வரியையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை காலமும் 2 இலட்சம் ரூபாவாக இருந்த அனுமதி பெறுவதற்கான வரி 10 இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சீவல் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.