(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் எச். ரீ. கமல் பத்மசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை (மே 31) நடைபெறவிருந்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிருவாக சபைத் தேர்தல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் எதிர்வரும் 14ஆம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டது.

இம் முறை தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் முன்னாள் செயலாளர் நிஷான்த ரணதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பின்னரே நீதிமன்றத்தினால் இத் தேர்தல் இடைநிறுத்தப்பட்டது.

திலங்க சுமதிபாலவை தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் எனவும் அவரை போட்டியிட அனுமதிக்கக்கூடாது எனவும் தனது மனுவில் தெரிவித்தே நிஷான்த ரணதுங்க மேன்முறையீடு செய்திருந்தார்.

இதேவேளை, திலங்க சுமதிபால தலைமையிலான ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன நிருவாகசபையின் பதவிக்காலம் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது.

இதனை அடுத்தே தேர்தல் நடைபெறும்வரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக கமல் பத்மசிறியை விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா வியாழக்கிழமை (மே 31) இரவு நியமித்தார்.