(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி இன்னும் தொடர்ந்தால் நாடு சீரழிவதைத் தடுக்க முடியாது. எனவே ஜனாதிபதியும் பிரதமரும் முன்வந்து உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்காலத்தில் அரசாங்கம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் உள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை ஏற்று மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில்  அவர் நேற்று விடுத்துள்ள அறிவிப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அவர் வருடத்திற்கு இரண்டு, மூன்று முறை இவ்வாறாக குழப்பமான அறிவித்தல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் நேற்றைய அறிவிப்பிலும் தனக்கு எதுவும் தெரியாதெனக் குறிப்பிட்டுள்ளார். எனவே நாடு பயணிக்கும் முறையைப் பார்க்கும்போது பெரும் கவலைாக உள்ளது.

2015 ஜனவரி எட்டு முதல் நாட்டில் திருட்டு இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவ்வாறெனின் எஞ்சியுள்ள இரண்டு வருடங்களில் எவ்வாறான திருட்டு இடம்பெறுமோ தெரியவில்லை.ஜனாதிபதியும் பிரதமரும் நேருக்கு நேராக இவ்விதமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும். 

மேலும் நல்லாட்சியிலே அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டு பிரதமரை நீக்க முடியாதவாறு திருத்தியமைத்துள்ளனர். இன்னும் சில தினங்களில் அதுவும் தனக்குத் தெரியாதென ஜனாதிபதி குறிப்பிடலாம். இவ்வாறான நிலையில் நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது?

ஆகவே நாட்டின் சகல துறைகளும் பலவீனப்பட்டுள்ளது. உயர் சபையான பாராளுமன்றமும் கேளிக்கைக்குரிய இடமாக்கப்படுகிறது.

எனவே நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றால் நாட்டில் பாரிய சீரழிவு ஏற்படும்.

ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் முன்வந்து உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.