(எம்.சி.நஜிமுதீன்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துடன் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு தொடர்பிருப்பது  உறுதி செய்யப்பட்டால் அவ்வுறுப்பினர்களை உடனடியாக நீக்கவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் அவ்வெதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"மத்திய வங்கி பிணைமுறி மோசடியைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களால் பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பிணைமுறி மோசடியை மறைப்பதற்கு பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் பெற்றமை குறித்தே அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். எனவே கோப் குழு குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கூட்டு எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் கோப் குழுவில் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதித்துவதத்தை அதிகரிக்குமாறும்  கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் கூட்டு எதிர்க்கட்சியின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து தருமாறு கேட்டுக்கொண்டோம். எனினும் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

2002 ஆம்  ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது. பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அக்கட்சி எதிர்க்கட்சிக்குச் சென்றது. எனவே அத்தரப்பு சுயாதீனமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கும் விவாதத்திற்கும் தனியாக நேரமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த மரபை சபாநாயகர் மீறியுள்ளார். மேலும் பாராளுமன்ற முறைமையையே அவர் மாற்றியுள்ளார். எதிர்த்தரப்பில் அதிகளவான உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சிக்கு குறைந்தளவான சந்தர்ப்பமே வழங்கப்படுகிறது.

மேலும் டி.யூ.குணசேகர தலமையிலான கோப் குழுவிலும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க குழுவின் அறிக்கைகளை ஒவ்வொரு நாளும் தமது புதல்வரூடாக அர்ஜுன மகேந்திரனுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆகவேதான் மோசடியுடன் தொடர்புடையவர்களை கோப் குழுவில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொண்டோம். எனினும் கோப் குழுவிற்கு உறுப்பினர்களை நியமிப்பது தனது பொறுப்பல்ல எனக்குறிப்பிட்டு சபாநாயகர் தப்பித்துக்கொள்ள பார்க்கிறார். மேலும் சபாநாயகரின் நடவடிக்கையினால் முழு பாராளுமன்ற செயற்பாடும் சீர்குலைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என பிரதமர், சபாநாயகர் முன்னிலையில் வாக்குறுதியளித்திருந்தார். அது குறித்து தற்போது சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினால் பதில் இல்லை. 

மேலும் உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதம் வழங்குவதாக இருந்தால் சகலருக்கும் ஒரேமாதிரியாக வழங்கப்பட வேண்டும். வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. தெற்கிலுள்ள மாகாண சபை உறுப்பினர்களுக்கு அச்சலுகை இல்லை. ஆகவே எந்தவொரு கொள்கையும் இல்லாது அராசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசாங்கத்தின் முறையற்ற நடவடிக்கைகளினால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால் அரசாங்கம் தேர்தலுக்குப் பயந்துள்ளது. மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு பயந்துள்ளது. கோத்தாய ராஜபக்ஷ ஓய்வு பெற்ற அரச சேவையாளர் ஒருவரே. அவர் தற்போது அபிப்பிராயம் ஒன்றை கட்டியெழுப்பி வருகிறார். அதற்கு அரசாங்கம் குழப்பமடையத் தேவையில்லை.

மேலும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூட்டு எதிர்க்கட்சி ஜனாதிபதியிடமும் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் பிரதமரைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.