தனது கள்ளகாதலுக்கு இடையூர் விளைவித்த மாமியரை தலையணை கொண்டு அமிழ்த்தி கொலை செய்த சம்பவமொன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.

மேலும், சம்பவம் குறித்து அறியவருவதாவது,

சிதம்பரம் ஜவகர் வீதியை சேர்ந்த அந்தோணி சார்லஸின் (38) மனைவி சோபியாஷைனி (29) இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. 

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். அந்தோணி சார்லஸ் சிதம்பரம் வடக்குரத வீதியில் சில்லறைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். காலை 7 மணிக்கு சில்லறைக்கடைக்கு செல்லும் அந்தோணி சார்லஸ் வியாபாரம் முடிந்து இரவு 10 மணிக்கு வீடு திரும்புவதை தனது வழக்கமாக கொன்றிருந்தார்.

இதற்கிடையே சோபியாஷைனி அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனை அறிந்த அந்தோணி சார்லஸ் மனைவியை கண்டித்து வந்தார். ஆனாலும் சோபியாஷைனி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. கணவன் சில்லறைக்கடைக்கு சென்ற பின்னர் கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து பழகி வந்தார். 

இதையடுத்து கள்ளக்காதலனுடன் மனைவி பழகுவதை தடுக்க அந்தோணி சார்லஸ் தனது தாயார் ராஜரீக மேரியை (62) தனது வீட்டுக்கு அழைத்து வந்து காவலுக்கு வைத்திருந்தார்.

குறித்த தினத்தில் காலை வழக்கம்போல அந்தோணி சார்லஸ் சில்லறைக்கடைக்கு சென்று விட்டார். குழந்தைகளும் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் சோபியாஷைனியும், ராஜரீக மேரியும் இருந்தனர். இந்த நிலையில் பகல் 12 மணியளவில் சோபியாஷைனி கணவனுக்கு போன் செய்து ராஜரீகமேரி கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டதாகவும், தற்போது ராஜரீகமேரி மயங்கிய நிலையில் உள்ளதாகவும் கூறினார். இதனால் பதறியடித்துக்கொண்டு அந்தோணி சார்லஸ் வீட்டுக்கு வந்தார். அப்போது முகத்தில் படுகாயத்துடன் தாய் இறந்து கிடப்பதை பார்த்து அந்தோணி சார்லஸ் அதிர்ச்சி அடைந்தார். மூக்கில் இருந்தும் இரத்தம் வடிந்தது.

தனது தாய் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அந்தோணி சார்லஸ் இது குறித்து சிதம்பரம் நகர பொலிஸில் புகார் செய்தார். பொலிஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சோபியா ஷைனியாவை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜரீகமேரியை கொலை செய்ததை சோபியா ஷைனி ஒத்துக்கொண்டார். ராஜரீகமேரி அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்ததாகவும், மேலும் ஆத்திரம் தீராமல் முகத்தில் சரமாரியாக தாக்கியதாக சோபியா ஷைனி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சோபியா ஷைனியை பொலிஸார் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.