(எம்.மனோசித்ரா)

சீரற்ற காலநிலை காரணனமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் உணவு விற்பனை நிலையங்களில் விஷேட பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க செயளாலர் எம்.பாலசூரிய தெரிவித்தார். 

புத்தளம், கம்பஹா, இரத்தினபுரி, காலி, கோகாலை, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வீடுகள், விற்பனை நிலையங்கள் வெள்ளத்தினால் பாரிய பாதிப்புக்களுக்கு  உள்ளாகியுள்ளன. 

அதன் காரணமாக வெள்ள நீர் உட்புகுந்த விற்பனை நிலையங்கள் , களஞ்சியசாலைகள், சந்தைகள் போன்றவற்றிலுள்ள பெரும்பாலான உணவு பொருட்கள் சேதமடைந்துள்ளன.

எனினும் சில விற்பனையாளர்களும், களஞ்சியசாலை உரிமையாளர்களும் வெள்ள நீரால் பழுதாகியுள்ள உணவு பொருட்களை குறிப்பாக அரிசி, பருப்பு, பயறு , கடலை போன்ற தானிய வகைகளை சுத்தம் செய்து அவற்றை மீண்டும் விற்பனை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடும்.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விஷேட அவதானம் செலுத்தப்படவுள்ளது. இன்று முதல் விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சிய சாலைகளிலுள்ள உணவு பொருட்கள் விஷேட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளதோடு, பாவனைக்கு உதவாத பழுதடைந்த உணவு பொருட்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மேலும் இவ்வாறு சேதமடைந்த உணவு பொருட்களை விற்பனை செய்யும் அல்லது விற்பனை செய்ய முயற்சிக்கும் விற்பனையாளர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் எனவும் அவர்  தெரிவித்தார்.