தூத்துக்குடி சம்பவத்தை முன்வைத்து இன்று தமிழக சட்பேரவையிலிருந்து எதிர்கட்சியான தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

இது குறித்து சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்ததாவது,

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கண்துடைப்பு நாடகம். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவு செய்தால், அமைச்சரவையைக் கூடி கொள்கை முடிவை எடுத்து அதை தீர்மானமாக நிறைவேற்றி அரசாணை வெளியிடவேண்டும். 

துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரிப்பதற்காக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் என்பது ஏமாற்று வேலை. துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலகவேண்டும்.’ என்றார்.

முன்னதாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டபேரவை வரவு- செலவு கூட்டத்தொடருக்கு பிறகு இன்று கூடியது.

இந்த கூட்டத்திற்கு தி. மு. க. சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து பங்குபற்றினர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பேரவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர தி.மு.க. சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்க மறுத்தார். இதனால் தி.மு.க. உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

மு .க. ஸ்டாலின் தூத்துக்குடி சம்பவம் குறித்த முதல்வரின் அறிக்கையில் துப்பாக்கி சூடு என்ற வார்த்தை ஓரிடத்திலும் இடம்பெறவில்லை என குற்றம் சாட்டினார்.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிக்க முதல்வருக்கு ஐந்து நாட்கள் தேவைப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டமன்ற நிகழ்வுகளில் தி. மு.க. பங்கேற்கபோவதில்லை என்று தெரிவித்து விட்டு ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. உறுப்பினர்களும் சட்டபேரவையிலிருந்து வெளிநடப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.