(இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன் குறித்து அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவுள்ளதுடன்  தேசிய கடன் தொடர்பில் உண்மையான தரவுகளை பெறுவதற்கு நிதியமைச்சில் எழுத்து மூல கோரிக்கை ஒன்றினையும் விடுத்துள்தாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த ஆண்டு மாத்திரம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகையானது 2845 பில்லியன் ரூபாவாகும் இது அடுத்த வருடம் இரட்டிப்படையும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளமையானது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

கடந்த அரசாங்கத்தை விட தேசிய அரசாங்கத்தின் மூன்று வருடகால நிர்வாகத்திலேயே மக்களின் வாழ்க்கை செலவுகள் உயர் மட்டத்தில் காணப்படுகின்றது. நாளாந்தம் அனைத்து துறைகளிலும் உற்பத்தி விநியோக செலவுகள் உயர்வடைந்த நிலையில் உள்ளது. 

இந் நிலையில் கடன்களை மீள செலுத்துவதற்காகவே அதிக வரிகள் அறவிடப்படுகின்றது என அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனாலும் வெளிநாட்டு கடன்களை இதுவரை காலமும் மீள் செலுத்தவில்லை.

இந் நிலையில் தேசிய கடன் குறித்து அரசாங்கம் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது என்றார்.