கினிகத்தேனை நாவலப்பிட்டி பிரதான வீதியில் அம்பகமுவ பகதுலுவ பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் தனியார் பஸ் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 9 பேர் பலத்த காயங்களுடன் கினிகத்தேனை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளது.

நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி சென்ற தனியார் பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுங்காயம் பட்டவர்களில் கினிகத்தேனை வைத்தியசாலையில் 2 பேரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த 2 பஸ் சாரதிகளும் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை நோக்கி சென்ற தனியார் பஸ் சாரதியை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

விபத்து  தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)