(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி தற்போது 20 ஆவது அரசியல் திருத்தத்தினை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளமையானது பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் விடுதலை முன்னணியினர் சமர்ப்பித்துள்ள 20 ஆவது திருத்தமானது மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒரு முறைமையாக காணப்படுகிறது. 

அதாவது மக்களினால் தெரிவு செய்யப்படும் வேட்பாளர் ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்ற முறைமை தற்போதைய அரசியலமைப்பில் காணப்படுகின்றது. ஆனால் 20 ஆவது அரசியலமைப்பில் இம்முறைமை இரத்து செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவையில் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி அங்கம் வகிக்கின்றது. இந் நிலையில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூன்று வருட காலத்தின் பின் தற்போது மக்கள் விடுதலை முன்னணியினர் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளமையானது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என்றார்.