(இரோஷா வேலு) 

கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

இது குறித்து பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு பகுதிகளிலிருந்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களின் மூன்று ஆண்களும் 26,24 மற்றும் 23 வயதுகளையுடைய பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

குறித்த மூவரும் பேலியகொடை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

 கைதுசெய்தவர்களிடமிருந்து 28 கிராமும் 390 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் நேற்று அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பேலியகொடை  குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். 

மேலும் இவ்வாறு வெலிகட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒபேசேகரபுற பிரதேசத்தில் வைத்து 31 கிராமும் 20 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டார். 

குறித்த சம்பவத்தில் 38 வயதுடைய இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். இவரை நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.