(எஸ்.ஜே.பிரசாத்)

காலியில் நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியின் போது நடந்த­தாக சொல்­லப்­படும் ஆடு­கள நிர்ணய சூதாட்டம் குறித்து விசா­ரிக்கும் தேவை எமக்கு இல்லை என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் உப தலைவர் மொஹான் டி சில்வா தெரி­வித்தார்.

காரணம் அப் போட்­டியில் இலங்கை அணி வெற்­றி­பெற்­றது. அதனால் எமக்கு அதில் எந்த சந்­தே­கமும் இல்லை என்று அவர் தெரி­வித்தார்.

அல் – ஜசீரா வெளி­யிட்ட குறித்த காணொ­ளியில் இடம்­பெற்­றி­ருந்த இலங்­கையைச் சேர்ந்த நால்­வரும் உட­ன­டி­யாக பணிநீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் தெரி­வித்தார்.

உல­களா­விய ரீதியில் கிரிக்கெட் சூதாட்டம் எப்­படி நடை­பெ­று­கின்றது. இதில் யார் யாரெல்லாம் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது குறித்த இர­க­சிய ஆய்­வொன்றை பிர­பல செய்தி நிறு­வ­ன­மான அல் – ஜசீரா செய்­தி­ருந்­தது.

இந்த ஆய்வால் கிரிக்கெட் உல­கமும் கடும் அதிர்ச்­சியில் உறைந்துள்­ளது. அதில் ஆட்ட நிர்­ணயம் மற்றும் ஆடு­கள நிர்­ணயம் குறித்து பல இரக­சி­யங்கள் அம்­ப­ல­மா­யின.

அதில் குறிப்­பாக இலங்­கையின் காலி மைதா­னத்தில் நடை­பெற்ற ஆஸி. மற்றும் இந்­தி­யா­வுக்கு எதி­ரான போட்­டி­களில் ஆடு­க­ளத்தை புக்­கி­களின் ஆலோ­சனைப்படி மாற்­றி­ய­மைத்­தமை அம்­ப­ல­மா­னது. அக் காணொ­ளியில் தோன்றும் காலி மைதா­னத்தின் ஆடு­கள பரா­ம­ரிப்­பா­ளர்­களே இதற்கு சாட்சி.

இந்­நி­லையில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்ள இலங்­கையின் தரிந்து மெண்டிஸ், தரங்க இந்­திக்க, குல­துங்க மற்றும் டில்­ஹார லொக்கு ஹெட்­டிகே ஆகி­யோர் உடனடியாக பதவிநீக்கம் செய்­யப்பட்டுள்­ள­தாக மொஹான் டி சில்வா தெரி­வித்தார்.

அத்­தோடு ஐ.சி.சி. நடத்தும் விசா­ர­ணை­க­ளுக்கு இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு இது குறித்து விசாரணை நடத்துமாறு புலனாய்வுப் பிரிவுக்கு முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே­வேளை குறித்த காணொ­ளியில் சொல்­லப்­படும் குற்­றச்­சாட்டு குறித்து விசா­ரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவையும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் நிய­மித்­துள்­ளதாகவும் அவர் தெரிவித்தார்.