சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வெளியாகவுள்ள ‘காலா’ திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காலா’ ஜூன் 7 ஆம் திகதி வெளியாக உள்ளது. இரண்டாவது முறையாக ரஜினி இவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால், இந்தப் படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வருகிறது. 

இந்நிலையில் இன்று அப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என அறிவித்திருந்தது படக்குழு. அதனையொட்டி படத்தின் ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தனுஷ்.

ரஜினி இசை வெளியீட்டு விழாவில் ஏற்கெனவே இந்தப் படம் அரசியல் படமல்ல, ஆனால் படத்தில் அரசியல் இருக்கிறது என்று கூறியிருந்தார். அதை உறுதி செய்யும் விதத்தில் ட்ரெய்லரில் அரசியல் கலந்த வசனங்கள் அனல் பறக்கின்றன. 

“குடிசை மத்தியில இருக்குற அழுக்கை அகற்ற போறேன். இந்த இருளை பிரகாசமா மாத்த போறேன்” என வில்லன் நானா படேகர் கூறுகிறார். 

அதைப்போலவே ரஜினி “இந்த உடம்புதான் நமக்கு இருக்குற ஒரே ஆயுதம். இத உலகத்துக்கே தெரியப்படுத்துவோம். கூட்டுங்கடா மக்களே” என்கிறார். 

மேலும் “நிலம் உனக்கு அதிகாரம். நிலம் எங்களுக்கு வாழ்க்கை” என்கிறார் ரஜினி. மும்பை தாராவியில் வாழும் தமிழர்களின் கதையை பின்புலமாக வைத்து ‘காலா’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்தப் படத்தில் மும்பை தமிழர்களின் நில உரிமை போராட்டத்தை களமாக வைத்து ரஜினி நடித்திருப்பது உறுதியாகி உள்ளது.