முப்படையினர் வசமுள்ள காணிகளை மக்களிடம் ஒப்படைப்பது தொடர்பில் துரித நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணிகள் விடுவிப்பதிலுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடுவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்று யாழ்.செயலகத்தில் இடம்பெற்றது. இதில் பங்கேற்பதற்காக வருகைதந்த , முப்படையினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் காணிப் பிரச்சினைகள் குறித்தும் வீதிகளை திறப்பது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. 

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், ஆளுநர் றெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ்.சிறிதரன், ஈ.சரணவபவன் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் மற்றும் 15 பிரதேச செயலாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மக்களின் காணிகளை ஒப்படைப்பதற்கு விரிவான அறிக்கையினைத் தயாரிக்குமாறு முப்படையினருக்குத் தெரிவித்த பிரதமர், பலாலி விமானநிலையம் தொடர்பில் விரிவான ஓர் அறிக்கையினையும் மாவட்டத்திலுள்ள ஏனைய முகாம்கள் தொடர்பிலான விபரங்களையும் தருமாறு கோரியுள்ளதுடன்  மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைப்பதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கமாறும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை மக்கள் பிரதிநிதிகளால் மக்களின் காணிகள் புதிதாக சுவீகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வலிகாமம் வடக்கில் கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் உள்ள பகுதிகளில் பிரதான வீதிகளை திறந்துவிட வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். கீரிமலை நகுலேஸ்வரம் வீதி கடற்படையினர் வசமுள்ளதால் அதனை மீளத்திறக்க வேண்டும். இதேபோன்று பருத்தித்துறை அச்சுவேலி ஊடாக பலாலிக்கு வரும் பாதையினையும் திறக்க வேண்டும். இந்தப் பாதை மூடப்பட்டுள்ளமையால் 40 கிலோமீற்றர் சுற்றி பயணிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. பருத்தித்துறை பலாலி வீதியையும் முழுமையாகத் திறக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் பிரதமரிடம் கோரியுள்ளனர். 

இந்த வீதிகளைத் திறப்பது குறித்து இராணுவத்தினரும் கடற்படையினரும் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அதுகுறித்து தனக்கு அறிக்கையிட வேண்டும் என்றும் பிரதமர் பணித்துள்ளார்.

ஆனைக்கோட்டைப் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள மூன்று தனியார் வீடுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காரைநகர் மடத்துவளவு பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 6 ஏக்கர் காணி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வலிந்தலை சந்தியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். கீரிமலைப் பகுதியில் அமைந்துள்ள மயானத்தையும் விடுவிக்க வேண்டும் என்றும் இங்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணிகள் உட்பட படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயுமாறும் இவ்விடயம் தொடர்பில் விரைவில் ஜனாதிபதி தலைமையில் முப்படையினர் மற்றும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும் பிரதமர் இந்தச் சந்திப்பில் உறுதி வழங்கியுள்ளார்.