நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தினை எதிர்நோக்கியுள்ள 5000 குடும்பங்களுக்கு ஆறு மாத காலப்பகுதியில் புதிய தனி வீடுகள் கட்டித்தரப்படும் என அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் அடுத்த வாரம் முதல் வீடுகளை கட்ட ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த மண்சரிவானது நுவரெலியா மாவட்டத்தை மாத்திரம் பாதிக்கவில்லை. பதுளையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் விரைவில் வீடுகள் கட்டித்தரப்படும் என  மலைநாட்;டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் நோர்வூட், மஸ்கெலியா, மொக்கா, காட்மோர், தலவாக்கலை, மடக்கும்புர, லிந்துல ஆகிய பகுதிகளில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை பார்வையிடுவதற்காக நேற்று விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவத்தார்.

இதன் போது இடர் முகாமைத்துவ நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதாகவும் இதன் போது அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது அம்பகமுவ பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ஆர்.வி.பி சுமன சேகர, தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.