(இரோஷா வேலு) 

டுபாயிலிருந்து இலங்கை வந்திருந்த இந்தியர்கள் இருவர் தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயற்சித்த வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து பொலிஸ் ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து டுபாயிலிருந்து இலங்கை வந்திருந்த இந்தியர்கள் இருவர், தமது கைப்பையில் மறைத்து வைத்து தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கடத்த முயற்சித்துள்ள வேளையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை விமான நிலைய போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் தடுத்து பரிசோதனைக்குட்படுத்தியுள்ளனர். 

இதன்போதே சந்தேகநபர்களின் கைப்பையிலிருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான 432 கிராம் நிறையுடைய 4 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் சந்தேகநபர்களை கைதுசெய்த பொலிஸார் அவர்களை மேலதிக விசாரணைகளுக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது குறித்த இவரும் 29 மற்றும் 43 வயதுகளையுடைய இந்தியாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த இருவரையும் தமது பொறுப்பில் எடுத்துள்ள சுங்க பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.