(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்  காலத்தில் பெற்ற வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்துவதாக கூறிய  தேசிய அரசாங்கமே தற்போது கடந்த கால அரசாங்கத்தினை விட அதிகளவான கடன்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த அரசாங்கத்தின் கடன்களை மீள் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதாக கூறிய தேசிய அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் பொது மக்கள் தொடர்ந்தும் ‍பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

கடந்த அரசாங்கம்  வெளிநாட்டு கடன்களை பெற்றிருந்தாலும் பல துறைகளிலும் அபிவிருத்தி  நிர்மானப்பணிகளை முன்னெடுத்தது. இந் நிலையில் கடந்த அரசாங்கத்தினை விட தேசிய அரசாங்கமே 2015 தொடக்கம் 2018 வரையிலான காலப்பகுதியில் அதிக வெளிநாட்டு கடன்களை பெற்றுள்ளது. 

எனவே முறையற்ற நிர்வாகத்தினை மேற்கொண்டு வரும் தேசிய அரசாங்கமானது தமது குறைகளை மறைப்பதற்காக தொடர்ந்தும் கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றது என்றார்.