மட்டக்களப்பு  சித்தாண்டி  சந்தனமடுஆறு பிரதேசத்திலிருந்து அனுமதிப் பத்திரமின்றி சிறிய ரக கெப் வாகனமொன்றில் ஏற்றிவரப்பட்ட மூன்று மாடுகளை இன்று அதிகாலை ஏறாவூர்ப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அந்த வாகனத்தின் சாரதியும் நடாத்துனரும்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் - சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் போதை பொருள் ஒழிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி எம்பிஜிஜிஎஸ். சத்துரங்க தெரிவித்தார்.

பொலிஸாருக் குக்கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து அங்கு சென்ற பொலிஸ் குழுவினர் மாடுகளுடன் வாகனத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

அந்த மாடுகள் நோயுற்று நடக்க முடியாத நிலையில் காணப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மீது மிருகங்களை வதைக்குட்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இம்மாடுகள் இறைச்சிக்காக அறுப்பதற்குக் கொண்டு செல்லப்பட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.