ஐ.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டியின் 11 ஆவது அத்தியாயத்தில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஒவ் ஐதரபாத் அணியும் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

இப்போட்டி மும்பை வென்கடே மைதானத்தில் இன்று(27-05-2018) இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதியன்று ஆரம்பமான இப்போட்டித் தொடரில் 8 அணிகள் பங்குகொண்டன. இதில், இரண்டு வருட தடைக்குப் பின்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தன் ரோயல்ஸ் அணியும் இம்முறை பங்குகொண்டன. 

ஒவ்வொரு அணியும், ஏனைய அணிகளுடன் தலா 2 முறை மோதிக்கொண்டன. கடந்த 20 ஆம் திகதியுடன் லீக் சுற்று நிறைவடைந்தன. இதில், சன் ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே ஓவ்’ சுற்றுக்கு முன்னேறின. 

நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8 ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.

கடந்த 22 ஆம் திகதியன்று ஆரம்பமான ‘பிளே ஓவ்’ சுற்றின், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதலாவது அணிக்கான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகளால் வென்று இறுதி போட்டிக்கு தெரிவானது.

வெளியேறும் அணிக்கான  போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணிக்கான போட்டியில் ஐதராபாத் அணி 14 ஓட்டங்களால் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 

சென்னை அணி சார்பில், துடுப்பாட்டத்தில் அம்பதி ராயுடு (585), கேப்டன் டோனி (455) ,  ஷேன் வொட்சன்  (438 ), சுரேஷ் ரெய்னா (413 ) ஆகியோர்  400 ஓட்டங்களுக்கு மேல் குவித்து நல்ல நிலையில் உள்ளனர். இதேபோல் ஜடேஜா, பிராவோ மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பந்து வீச்சில் வேகப்பந்து வீரர் நிகிடி நன்றாக செயல்படுகிறார்.

மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையும், கடைசி கட்ட பந்து வீச்சும் சிறப்பாக அமைந்தால் 2010,2011 இல் சம்பியன் பட்டத்தை வென்று போல இம்முறையும் கிண்ணத்தை வெல்லலாம். 

ஐதராபாத் அணி துடுப்பாட்டம்  மற்றும் பந்துவீச்சில்  சமபலத்துடன் காணப்படுகிறது. அந்த அணி சென்னைக்கு பதிலடி கொடுத்து இர்ணடாவது தடவைாக ஐ.பி.எல். கிண்ணத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இவ்வணி 2016  இல் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

ஐதராபாத் அணியில் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர்  வில்லியம்சன் (688), தவான் (471), மனீஷ் பாண்டே (286 ), யூசுப் பதான் (215), ஷகிப் அல்-ஹசன் (216 ) ஆகியோரும், பந்து வீச்சில் ரஷீட் கான் (21 விக்கெட்), சித்தார்த் கவுல் (21 விக்கெட்), புவ்னேஷ்வர் குமார், சந்திப் சர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

இரு அணிகளும் கிண்ணத்தையை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக அமையும்.

சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால் ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார்? என்று  பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.