யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வசந்தபுரம், நித்திய ஒளி சாபி நகர் கிராமங்களுக்கு வீட்டுத் திட்டங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த மீள்குடியேற்ற அமைச்சர், புனர்வாழ்வு அதிகார சபையின் தலைவர் அன்னலிங்கம் மற்றும் வடகடல் நிறுவனத்தின் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோரை வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரன் குறித்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று அப்பகுதி மக்களின் நிலமைகளை செய்யப்பட வேண்டிய வேலைகள் தொடர்பில் கலந்துரையாடி உள்ளார்.

இதன்போது அப்பகுதி மக்கள்,

"நாங்கள் நீண்டகாலமாக இங்கு வசித்துவருகின்ற போதும் எமக்கான வீட்டுத்திட்டங்களோ மலசல கூடங்களோ இல்லாத நிலையில் அனைவராலும் கைவிடப்ப்ட நிலையிலேயே வாழ்ந்து வருகின்றோம். அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் இருக்கும் எமக்கு சிறு மழை பெய்தாலே இங்கு வெள்ளம் தேங்கி நிற்கும். வெள்ளம் வழிந்தோடுவதற்கு ஏற்ப வடிகால் அமைப்புக்கள் கூட இல்லாத நிலையே உள்ளது.

அதிகாரிகளுக்கு பல முறை கூறியும் நடவடிக்கைகள் இல்லை. இதனால் பல தொற்று நோய்களுக்கு ஆளாகின்ற நிலையிலேயே வசித்து வருகின்றோம். மாகாண சபை உறுப்பினர் எமது கிராமத்தை பார்வையிட்ட பின்னரே மீள் குடியேற்ற அமைச்சரை இங்கு அழைத்து வந்துள்ளார். எனவே எமக்குரிய வீட்டுத் தேவைகளை நிறைவு செய்து தாருங்கள்." என கோரிக்கை விடுத்தனர். 

குறித்த கிராமங்களை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகள், நிலமைகளை ஆராய்ந்ததுடன் குறித்த கிராமங்களை மாதிரிக் கிராமங்காளாக மாற்றுவதற்கு தாம் நடவடிக்கைகளை எடுப்பதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

குறித்த பகுதியானது நீண்ட காலமாகவே எந்தவொரு அடிப்படை தேவைகளையும் நிறைவு செய்யப்படாத நிலையிலேயே இங்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். குறித்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் ஜெயசேகரம் மீள்குடியேற்ற அமைச்சரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்ததன் பயனாகவே குறித்த பகுதி மக்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 40 ஆயிரம் வீட்டுத்திட்ங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் இத் திட்டத்தில் இப்பகுதியில் உள்ள மக்களுக்கும் வீடுகளை வழங்குவதற்கு அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.