(எம்.சி.நஜிமுதீன்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் தேர்தல்கள் அனைத்திலும்  வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்கட்சியுடன் இணைந்துகொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதினாறு உறுப்பினர்களும் கடந்த புதன் கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தனர். அச்சந்திப்பு வெற்றியளித்துள்ளதால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து எதிர்க்கட்சியாகச் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கவுள்ளதாகவும் அதில் தற்காலிகமான நிர்வாக சபையை நியமிக்கவுள்ளதாகம் அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் தெரிவித்திருந்தார். ஏனெனில் தற்போது கட்சியின் நிர்வாகத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அதிகளவானோர் அங்கம் வகிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதிகளவானோரின் ஆதரவு இருப்பது உறுதியாகியுள்ளது. அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகித்துக்காெண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குபவர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே எதிர்வரும் சகல தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டுவது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.