சீபா ஒப்பந்தத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் செயற்பட்டமையினால் இந்தியா றோ அமைப்புடன் உள்ளுர் சக்திகளை கொண்டு இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.  மறுபடியும் சீபா ஒப்பந்தத்தை  வேறு பெயரில் கைச்சாத்திட நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

நாட்டிற்கு எதிராக பல்வேறு நெருக்கடியான சூழல் தற்போது ஏற்பட்டுள்ள போதிலும் அதனை தட்டிக்கேட்க எதிர்க் கட்சி இல்லை . பெயரளவில் எதிர்க் கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது. எனவே ஜனநாயகத்தின் நான்காம்  கண்ணாக கருத கூடிய ஊடகங்களை நம்பியே தாம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

ஊடகங்களுக்கு கூறுவதற்கு 100க்கும்  மேற்பட்ட விடயங்கள் எம்மிடம் உள்ளன. ஆனால் எதனை முதலில் கூறுவது ? எவ்வாறு ஆரம்பிப்பது என்று தான்  புரியவில்லை. எவ்வாறாயினும் ஊடகத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றேன். எமது காலத்தில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. ஒரு சில சம்பவங்கள் நடந்தன . அதனை நாம் இல்லை என கூற வில்லை. ஆனால் இன்று ஜனநாயகம் நல்லாட்சி என கூறிக் கொண்டு ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் பெயர்களை கூறி இன்று அச்சுறுத்துகின்றனர். 

அனைத்து விலங்கினங்களினதும்  பெயரை கூறி சாடுகின்றனர். இதுவா ஊடக சுதந்திரம். இதனை எதிர்த்து ஜனநாயகத்தை பாதுகாக்க வலுவாக குரல் கொடுக்க எதிர்க் கட்சி இல்லை . மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்தின் பங்குதாரர்களாக செயற்படுகின்றன. எனவே நாட்டில்  எற்பட கூடிய பேரழிவில் இருந்து பாதுகாக்க ஊடகங்கள் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை தத்துவங்களை மீறி நல்லாட்சி அரசாங்கம் எதிர் கட்சியையும் பங்குதாரராக்கிக் கொண்டுள்ளது. ஆனால் நாங்கள் மூன்றாம் நிலை சக்தியாக பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் செயற்படுவோம். 

அரசியல் பழிவாங்கல் எல்லையற்று இடம்பெறுகின்றது. நாட்டை பாதுகாக்கும் நோக்கில் 2009 ஆம் ஆண்டு இறுதி காலப்பகுதியில் இந்தியா வலியுறுத்திய சீபா ஒப்பந்தத்தை நாங்கள் நிராகரித்தோம் . அப்போதைய இந்திய எதிர்க் கட்சி தலைவரான சுஸ்மா சுவராஜும் அந்த ஒப்பந்தத்தையே வலயுறுத்தினார். ஆனால் நாங்கள் நிராகரித்தோம். எமது நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கான சந்தர்ப்பம் இந்தியர்கள் வசம் போய் விட கூடாது என்பதற்காக இதன.ை செய்தோம்.   ஆனால் இன்று சீபா ஒப்பந்தத்தை  வேறு ஒரு பெயரில் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. நாம் இதனை எதிர்த்தமையினால் அன்று இந்தியா முழுமையான பலத்தை பயன்படுத்தி இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. 

மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்தியாவிற்கும் தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. நாட்டின் நலன் கருதி சில விடயங்களை நாங்கள் செய்ய வில்லை. ஆனால் அவை முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதி , பிரதமர் ,எதிர்க் கட்சி தலைவர் மற்றும் வடக்கில் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனை சந்தித்து விட்டு இலங்கையில் சுமூகமான நிலை காணப்படுவதாக தெரிவித்து விட்டு செல்கின்றனர். ஆனால் உண்மை நிலையை வெளிப்படுத்த எமக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுவதில்லை என்றார்.