துப்பாக்கிதாரிகள் குறிவைத்தது யாரை ; கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் சகோதரர்  தெரிவிப்பு

By Priyatharshan

25 May, 2018 | 02:43 PM
image

போதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடே என் தந்தை மீதான துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம். சில நொடிகள் வித்தியாசத்தில்  அப்பா துப்பாக்கிக் குண்டுபட்டு பலியானாரென இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் வர்த்தகத்திற்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணம்.

வீட்டிற்கு வெளியே நேற்றிரவு 8.30 அளவில் நானும் எனது தந்தையும் இன்னும் சிலரும் நின்று பேசிக் கொண்டிருந்தோம். நான் கடைக்குச் சென்றுவருவதாக கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தேன். 

நான் அந்த இடத்தில் இருந்து சென்ற சில நிமிடங்களில் அங்குவந்த இனந்தெரியாத நபர்கள் அப்பா மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

'இந்த மாத முற்பகுதியில் இந்தப் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்யும் பாதாள உலகக் குழுவினர் குறித்து பொலிசாருக்கு முறைப்பாடொன்று செய்திருந்தோம்.

இவர்கள் யார் என்பது எமக்கு நன்றாக தெரியும். இவர்கள் மோசமானவர்கள் என்பதால் யாரும் இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. 

ஆனால் நாம் இதனை செய்தோம். முறைப்பாடு செய்ய சென்றபோதுகூட இவர்கள் ஆபத்தானவர்கள் என பொலிஸார் எம்மை எச்சரித்தனர். இருந்தாலும் நாம் முறையிட்டோம். இதன் பின்னர் அந்தக் கும்பல் ஒரு சந்தர்ப்பத்தில் என்னுடன் மோதலில் ஈடுபட்டது. இதன் பின்னரே நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

நானும் தந்தையும் தான் இவர்களுக்கு எதிராக செயற்பட்டோம். நான் தான் இவர்களுக்கு எதிராக கடுமையாக செயல்பட்டிருந்தேன். இதற்கு முன்னர் எனக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்திருந்தனர். என்னை இலக்குவைத்தே இவர்கள் வந்திருக்க வேண்டும். 

ஆனால் சில நொடிகள் மாறிப்போக அப்பா அந்த துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினார் என தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான 62 வயதுடைய கே.ரஞ்சன் சில்வா இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி உயிரிழந்தார்.

இச் சம்பவம் நேற்றிரவு கொழும்பு, இரத்மலானை, ஞானாந்த பகுதியில் அவர்களது வீட்டிற்கு முன்னாலுள்ள ரயில் கடவைக்கு அருகில் இடம்பெற்றது.

இதன்போது காயமடைந்த மேலும் இருவர் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனவும், புலன் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கல்கிஸ்ஸ பொலிசார் தெரிவித்தனர்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு இன்று அதிகாலை புறப்பட்டத் தயாராக இருந்த நிலையிலேயே நேற்றிரவு இந்த துப்பாக்கிச் சூடு தனஞ்சய டி சில்வாவின் தந்தை மீது மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை தனஞ்சய டி சில்வா தவிர்த்துக் கொண்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரன், சாவித்திர டி சில்வா தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநரக சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன், அவரது தந்தை கே.ரஞ்சன் சில்வா (62) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தெஹிவளை, கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right