(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பிணை நிபந்தனையை மீறியமைக்காக  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரத் நிஷாந்தவுக்கு தொடர்ந்தும் பிணை வழங்கப்படாமல் உள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறும் செயலாகும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சரத் நிஷாந்த பிணை நிபந்தனையை மீறியமைக்கும் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கான  விளக்கமறியலும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறலாகும். 

புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  மக்கள் பிரதிநிதியொருவர் சிறைக்குள் தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே சபாநாயகர் இவருக்கு பிணை வழங்க தலையீடு செய்ய வேண்டும் என்றார்.

இதனையடுத்து இதற்கு பதிலளித்து உரையாற்றிய சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல,

நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த இவர் இப்படி கூறலாமா? சபாநாயகருக்கு பிணை வழங்க முடியாது. பொதுவாக இது நீதிமன்ற விவகாரம் என்பதனால் எமக்கு பாராளுமன்றத்தில் வாதம் செய்யவும் முடியாது. அவரை விடுவிக்க வேண்டுமாயின் நல்ல சட்டதரணியை பிடிக்க வேண்டும். இது நீதிமன்றத்தை அச்சுறுத்தும் செயற்பாடாகும் என்றார்.