இந்திய அரசாங்கம், கொழும்பிலுள்ள இந்திய கலாச்சார நிலையத்திற்கு புகழ்பெற்ற இந்திய தத்துவஞானி மற்றும் ஆன்மீகத் தலைவர் சுவாமி விவேகானந்தாவின் பெயரை சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது.

1998 இலிருந்து கொழும்பில் கலாச்சார நிகழ்வுகளுக்கான ஒரு முக்கிய மையமாக இருந்து வரும் இந்திய கலாச்சார நிலையம் இதன் பின்னர் “சுவாமி விவேகானந்தா கலாச்சார நிலையம் கொழும்பு” (SVCC) என அழைக்கப்படும்.

சுவாமி விவேகானந்தர் உலகம் முழுவதுமாக மதிக்கப்படும் ஒருவரென்பதுடன் 19 ஆம் நூற்றாண்டில் இந்திய சமூகச் சீர்திருத்தத்தில் முன்னின்று உழைத்தவராவர். 

மேற்குலகத்திற்கு வேதாந்தம் மற்றும் யோகா போன்ற இந்தியத் தத்துவங்களின் அறிமுகத்தில் அவர் ஒரு முக்கியமானவராகத் திகழ்ந்தார். அவர் இலங்கை உட்பட உலகம் முழுவதிலுமாக பாராட்டப்படும் அதன் மனிதநேய சேவைகளுக்காக அறியப்பட்ட, இராம கிருஷ்ண மிஷனின் ஸ்தாபகராவர். 

இலங்கையுடனான அவரது நெருங்கிய தொடர்பு மற்றும் 1897 இல் இலங்கைக்கு அவரது வரலாற்று ரீதியான விஜயம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கொழும்பு, இந்திய கலாச்சார நிலையத்திற்கு சுவாமி விவேகானந்தாவின் பெயரைச் சூட்டுவது குறிப்பாக முக்கியமானதொன்றாகும்.