(எம்.எம்.மின்ஹாஜ்)

எட்கா என்றழைக்கப்படும் இந்தியாவுடனான  பொருளாதார மற்றும் கூட்டுறவு ஒப்பந்தம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுகின்றன. இது ஒரு உடன்படிக்கையல்ல. கைச்சாத்திடவுள்ள ஒப்பந்தில் காணப்படும் குறை நிறைகள் குறித்து ஆராயும்  ஆரம்ப கட்ட நடவடிக்கையாகும். இதனால் இந்தியாவிலுள்ள வைத்தியர்கள் இலங்கைக்கு வந்து தொழில் புரியப்போவதில்லை. நாட்டுக்கு முரணான எந்தவொரு திட்டத்தையும் அரசாங்கம் பலவந்தமாக மக்கள் மத்தியில் திணிக்காது என பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்தார்.

முன்னைய ஆட்சியின் போது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு பதிலாக எமது பெண்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருமானம் ஈட்டிக்கொண்டனர். எமது அரசாங்கத்தில் அவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது. சர்வதேச நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க முடியாவிடின் இலங்கையின் எதிர்காலம் கேள்விகுறியதாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது இலங்கையில் பீட்சா, கே.எப். சி போன்ற உணவகங்களில் தொலைபேசியில் அழைத்தவுடன் வீட்டு சாப்பாடு நொடி .பொழுதில் வந்து சேர்கின்றன. எனினும் அம்பியூலன்ஸ் சேவை மிகவும் மோசமாக காணப்படுகின்றது. வாகன நெரிசலில் சிக்குண்டு முச்சக்கர வண்டியிலேயே எம்மவர்களின் உயிர் பிரிகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவுடன் செய்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படும்  பொருளாதார மற்றும் கூட்டுறவு (எட்கா) ஒப்பந்தம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே   பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.