அணுவாயுதங்களை பரிசோதனை செய்வதற்கு தான் பயன்படுத்திய பகுதி அழிக்கப்படுவதை காண்பிக்கும் படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ள வடகொரியா தனது ஜனாதிபதியுடனான உச்சி மாநாட்டை இரத்து செய்யவேண்டாம் என அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளது.

வடகொரிய ஜனாதிபதியுடனான உச்சிமாநாடு இரத்துச்செய்யப்படுவதாக டிரம்ப் கடிதம் மூலம் தெரிவித்து ஒரிரு மணிநேரத்தில் வடகொரியா  அணுவாயுத பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் பகுதிகள் நிர்மூலக்கப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

வடகொரியா அணுவாயுத பரிசோதனைக்கு பயன்படுத்தும்  புங்யே – ரி என்ற பகுதியில் சுரங்கமும் கண்காணிப்பு நிலையமொன்றும் நீர்மூலக்கப்படுவதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.

குறிப்பிட்ட பகுதியிலேயே வடகொரியா தனது ஆறு அணுவாயுத பரிசோதனைகளையும் மேற்கொண்டிருந்தது.

அணுவாயுத பரிசோதனை நிலையங்கள் நிர்மூலக்கப்படுவதை பார்ப்பதற்காக அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பாரிய சத்தமொன்று கேட்டதாக தெரிவித்துள்ளனர்.

மூன்று சுரங்கங்களிலும் பல கண்காணிப்பு நிலையங்களில் பாரிய வெடிப்பு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிய சத்தமொன்று கேட்டது எங்களால் அதனை உணரமுடிந்தது  பெரும் புகைமண்டலமொன்று வெளியாகியது என பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த பகுதியில் ஆறு பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளது.

இதேவேளை  குறிப்பிட்ட பகுதியை வடகொரியாவினால் மீண்டும் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இந்த பகுதியில் ஆறு பரிசோதனைகளை வடகொரியா மேற்கொண்டுள்ளதால் இந்த பகுதி எப்போதோ பலனற்றதாகிவிட்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் வடகொரியாவினால் உடனடியாக இந்த பகுதியை மீள உருவாக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நிர்மூலமாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள பரிசோதனை நிலையங்களிற்கு அருகில் வேறு இரு பரிசோதனை நிலையங்கள் உள்ளன எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை இந்த நடவடிக்கைகையை பார்ப்பதற்கு சர்வதேச நிபுணர்களை வடகொரியா அழைக்காததையும் சுட்டிக்காட்டியுள்ள ஆய்வாளர்கள் அந்த நாடு தனது ஆதாரங்களை அழிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தயார் எனவும் வடகொரிய அறிவித்துள்ளது.

அமெரிக்கா பேச்சுவார்த்தைகள்  இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை நாங்கள் எதிர்பார்க்காத விடயம், என தெரிவித்துள்ள வடகொரிய அதிகாரியொருவர் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக எந்த வித நேரடிப்பேச்சுவார்த்தையிலும் ஈடுபட தயார்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.